இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2012

பினாங்கு – இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான யூத் எம்.சி என அழைக்கப்படும் இளம் பட்டதாரிகளின் இயக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவினை எற்று நடத்தி வருகின்றனர்.

 

கடந்த மே திங்கள் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பினாங்கு மாநில அளவிலான 2012-ஆம் ஆண்டின் இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான யூத் எம்.சி என அழைக்கப்படும் இளம் பட்டதாரிகளின் இயக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவினை எற்று நடத்தி வருகின்றனர். பினாங்கிலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் 20 தமிழ்ப்பள்ளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் அறிவியல் திறனை வெளிப்படுத்தினர். இதனை தவிர்த்து பள்ளி மாணவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி ஆகியனவும் நடத்தப்பெற்றன.

இந்நிகழ்வின் நீதிபதிகளாக பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், முதுகலைப் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் பட்டதாரிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக யூத் எம்.சி இயக்கத்தின் தலைவர் திரு.எட்வின் ஆனந்த் ராஜ் கூறினார். மேலும், எதிர்காலங்களில் இந்நிகழ்விற்கு வலு சேர்க்க பல அரசு சாரா அமைப்புகள் உதவி புரிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்

பள்ளியில் மாணவர்கள் கற்கும் அறிவியலுக்கும் அறிவியல் விழாவிற்கும் பல வேறுபாடுகள் இருப்பதாயும், ஒர் அறிவியல் நுணுக்கத்தினை பரிசோதனைகளின்வழி தெரிந்துகொண்டு அதனை விளக்குவதுதான் சிறந்த அறிவியல் உத்தியாகும் என திட்ட ஆலோசகர் திரு.முகமது யூனூஸ் கூறினார். இவ்வறிவியல் விழாவின் வழி பல எதிர்கால விஞ்ஞானிகளை தாம் அடையாளம் கண்டுள்ளதாகவும், இது தமிழ்ப்பள்ளிகளுக்கு பெருமை சேர்க்கும் விடயம் எனவும் அவர் மேலும் கூறினார்.

See also  UM’s Dr. Lai Chin Wei awarded JCI TOYP 2024 honour

பள்ளி பாட நேரத்தைத் தவிர்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களின் அறிவியல் பரிசோதனையை பல வாரங்களாக மேற்கொண்டு வெற்றிப் பெறச் செய்ததாகவும், மாணவர்களின் ஈடுபாட்டினைக் கண்டு தாம் மெச்சுவதாகவும் தோட்டப்புறத்தில் அமைந்துள்ள திரான்சு கிரியான் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை மோகனசுந்தரி கூறினார்.

பிறை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர் திரு.குமார் கூறுகையில், பிறை தமிழ்ப்பள்ளி மூன்று ஆண்டுகளாக அறிவியல் விழாவில் பங்கெடுத்து வருவதாகவும், இம்முறை தன் மகனும் இப்போட்டியில் பங்கெடுத்திருப்பது தமக்கு மகிழ்வை அளிப்பதாகவும் கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பினையும், அவர்களின் படைப்புத் திறனையும் கண்டு தாம் அதிசயிப்பதாக போட்டியின் நீதிபதிகளில் ஒருவரான பௌதிகவியலில் முதுகலைப் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் குமாரி அனிதாம்பிகை பெருமாள் கூறினார். தாம் இந்நிகழ்வில் நீதிபதியாக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை எனவும் அவர் கூறினார்.

காலை 8 மணியளவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில் ஆசியர்களும் மாணவர்களும் தத்தம் கூடாரங்களை அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டனர். காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நீதிபதிகள் ஒவ்வொரு கூடாரமாகச் சென்று மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். மதிய உணவிற்குப் பின்பு துவாங்கு சேட் புத்ரா மண்டபத்தில் சிறப்பு வருகையாளர்களின் உரை, பல்லூடகப் படைப்பு மற்றும் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பெற்றன. இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா 2012-ஆம் ஆண்டிற்கான மூன்றாம் நிலை வெற்றியாளராக புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளியும், இரண்டாம் நிலை வெற்றியாளராக பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியும் முதல் நிலை வெற்றியாளராக நிபோங் திபால் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின. நிகழ்வு சுமார் மாலை 4.00 மணியளவில் முடிவுற்றது.

See also  UM’s Dr. Lai Chin Wei awarded JCI TOYP 2024 honour
நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள்


வெற்றிப் பெற்ற தமிழ்ப்பள்ளிகள்


டத்தோ புலவேந்திரனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது


மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் - புக்கிட் மெர்தாஜாம் தமிழ்ப்பள்ளி


இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் - பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி


நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான ’யூத் எம்.சி’


வர்ணம் தீட்டும் போட்டியின் வெற்றியாளர்கள்


அறிவியல் விழாவில் கலந்துகொண்ட வருகையாளர்கள்


மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரின் சிறப்புரை


வெற்றிக் கோப்பைகள்


தாவரங்களின் ஒளித்தொகுப்பு பரிசோதனை


எண்ணெய் விளக்கு பரிசோதனை


வெற்றிப்பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சிறப்பு வருகையாளர்கள்


மாணவர்களின் அறிவியல் நண்பன் ’அறிவன்’


தொகுத்து வழங்கியவர் | மக்கள் நிருபர் : சதீஷ் குமார்

Sathis Kumar