1559 மெட்ரிக்குலேசன் இடங்கள் நிலவரம் என்ன?

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, நாட்டின் பிரதமரால் இந்திய மலேசிய மாணவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறிவிப்பு செய்யப்பட்ட 1559 அரசாங்க மெட்ரிக்குலேசன் இடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படாமல் இருப்பதாக பலதரப்பட்ட சமூக இயக்கங்கள் சாடி வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி, நாட்டின் பிரதமரால் இந்திய மலேசிய மாணவர்களுக்கென்று பிரத்தியேகமாக அறிவிப்பு செய்யப்பட்ட 1559 அரசாங்க மெட்ரிக்குலேசன் இடங்கள் பெரும்பாலும் நிரப்பப்படாமல் இருப்பதாக பலதரப்பட்ட சமூக இயக்கங்கள் சாடி வருகின்றன. அவ்வகையில் மலேசிய இந்திய கல்வி மறுமலர்ச்சி இயக்கம் (மீத்தா) அண்மையில் கல்வி அமைச்சின் மெட்ரிக்குலேசன் பிரிவின் இயக்குனரிடம் மகஜர் ஒன்றினை சமர்ப்பித்து உள்ளதாக அவ்வியக்கத்தின் தலைவர் திரு.இளங்கோவன் மலேசிய மக்கள் நிருபரிடம் தெரிவித்தார்.

”எங்களின் பட்டியலில் எசு.பி.எம் தேர்வில் 7’ஏ’க்களுக்கு மேல் பெற்ற 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மெட்ரிக்குலேசன் இடம் கிடைக்காமல் இருக்கின்றனர். இன்றுவரையில் எத்தனை மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியாக உள்ளது.” என்று அவர் கூறினார்.

”ஆகையால் கொடுப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 1559 மெட்ரிக்குலேசன் இடங்கள் தகுதியுள்ள இந்திய மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இதற்காக கல்வி அமைச்சுடன் இணைந்து செயலாற்ற தீர்மானம் எடுத்துள்ளோம்.” என்றார் அவர்.

”தகுதிகள் இருந்தும் மெட்ரிக்குலேசன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் உடனே எங்களைத் தொடர்பு கொண்டு, அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எங்களிடமிருந்து ஆலோசனை பெறலாம்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.

See also  Rescue Karpal Singh Drive: Act with urgency now

இந்திய மாணவர்கள் எதிர்நோக்கிவரும் இச்சிக்கல்களைக் களைய ‘தமிழன் உதவும் கரங்கள்’ எனும் அரசு சார்பற்ற இயக்கமும் தங்களுடன் இணைந்து செயலாற்றி வருவதாக அவர் மேலும் கூறினார்.

மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை அரசாங்கம் இரகசியமாக வைத்திருப்பதை பல அரசு சார்பற்ற இயக்கங்கள் சாடி வருவதாகவும், ஊடகங்கள் வாயிலாக இத்தகவல்களை வெளிப்படையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் எனவும் திரு.இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.

Saminathan